Posts Tagged ‘அனுபவம்’

வாழை – ஜூலை 2010 – முதல் ஒர்க் ஷாப் அனுபவங்கள் – பகுதி 3

வாழை – ஜூலை 2010 – முதல் ஒர்க் ஷாப் அனுபவங்கள் – பகுதி 1

வாழை – ஜூலை 2010 – முதல் ஒர்க் ஷாப் அனுபவங்கள் – பகுதி 2

ஞாயிறு அன்று காலை நல்லதாகவே விடிந்தது. இந்த முறை தண்ணீர் பிரச்சினை இல்லை 🙂 முதல் session எளிய முறையில் உடற்பயிற்சிகள் & யோகா. எங்கள் ‘தல’ தணிகை அவர்கள் இந்த ஒர்க் ஷாப்பிற்கு வர இயலாததால் உளவுத்துறை விவேக் மற்றும் புதிய சிங்கம் நடராஜ் ‘திடீர் மாஸ்டர்’ ஆனார்கள். ஆரம்பித்து கொஞ்ச நேரத்திலேயே ஒரு வார்டு ‘மயக்கமடைந்தார்’. ஒருவேளை காலைத் தூக்கமாகக் (!) கூட இருக்கலாம். இருந்தாலும் உஷாராகி பயிற்சிகளைக் குறைத்துக் கொடுத்தனர். பின்னர் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு News paper reading session நடந்தது. கௌரி மற்றும் ரமேஷ் மிகவும் எளிமையான முறையில் செய்தித்தாள் பற்றிய அறிமுகத்தையும் வாசிப்பதன் அவசியம் பற்றியும் தெளிவாகவும் அழகாகவும் கூறினர். தமிழில் அவர்களின் தகுதி நிலை அறிய இந்த செய்தித்தாள் வாசிப்பும் ஒருவகையில் உதவும்.

இதே நேரத்தில் 7 & 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு workbook session நடந்தது. இதில் நான் ரசித்த ஒரு விஷயம் அமாவாசை முதல் பௌர்ணமி வரையிலான நிலவின் ஒவ்வொரு நிலையையும் வார்டுகள் பதிவு செய்ய வேண்டும். வார்டுகளின் மனதில் பூமி கடந்த பிரபஞ்சம் பற்றிய ஆர்வத்தையும், நிலவு ஏன் தேய்ந்து வளர்கிறது என்ற கேள்வியையும் இது தானாக எழுப்பும் அல்லவா?

Breakfast முடிந்தபின்னர் 6ஆம் வகுப்பு வார்டுகளுக்கு Level Identification Test மற்றும் வாழை அமைப்பின் பயன்கள் பற்றிய நாடகமும், வாழை அண்ணா/அக்காக்களுக்கு எப்படி missed call கொடுப்பது, எப்படி கடிதம் எழுதுவது என்பதை விளக்கும் நாடகமும் நடந்தது. இந்த நாடகங்களை நம் வாழை மக்களே செய்தனர். முந்தையநாள் இரவு வார்டுகளே நடத்திய நாடகத்தைக் காட்டிலும் இதில்தான் காமெடி அதிகம். கலெக்டராக வந்தவர், ஒரு dialogue-ல் மாணவர்களைப் பார்த்து “ஹ்ம்ம்… உங்களுக்கெல்லாம் வாழைன்னு ஒரு அமைப்பு கிடைச்ச மாதிரி நான் படிச்ச காலத்தில எனக்கும் கிடைச்சிருந்தா நானும் பெரிய ஆளாகியிருப்பேன்” என்றார்… தான் ஒரு கலெக்டர் என்பதையே மறந்து! ஒத்திகை இல்லாமல் பேசுவதால் இதெல்லாம் சகஜமப்பா…! 7 & 8ஆம் வகுப்பு வார்டுகளுக்கு திரு.சேதுராமன் இயற்பியல் சார்ந்த சில எளிய பயிற்சிகள் மூலம் மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் முயற்சியை மேற்கொண்டார். வார்டுகளுக்கு மட்டுமல்ல… mentor-களுக்கும் மிகவும் பயனுள்ள ஒரு session-ஆக அது இருந்தது எனலாம்.

Lunch-க்கு பிறகு துவங்கியது House Visit. அதாவது ஒவ்வொரு புதிய mentor-ம் அவரது ward-ன் வீட்டிற்குச் சென்று அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் அறிமுகப்படுத்திக் கொள்ளுதல். இது அந்த வார்டு எந்த சூழலில் வளர்கிறார், அவரது குடும்ப பொருளாதாரம் எந்த அளவில் உள்ளது என்பதை mentor-கள் தெரிந்து கொள்ளவும், வார்டுகளின் பெற்றோர்களுக்கு mentor-கள் மீது ஒரு நம்பிக்கை வருவதற்கும் ஒரு வாய்ப்பாக அமைகிறது. அந்தந்த வார்டுகளோடு mentor-கள் சேர்ந்து வேனில் ஏறி கிராமவலம் வந்தோம். வார்டுகளின் வீடுகளைப் பார்க்கையில், வாழைக்கு புதிய வரவாக வந்த உறுப்பினர்களின் கண்களில் ஒருவித அதிர்ச்சியைக் காண முடிந்தது.

அதனை வீடு என்று ஒத்துக்கொள்ள முடியாத அளவிற்கு மிகமிகச் சிறியதொறு அறை.. அதற்குள்ளேயே வீட்டிற்குத் தேவையான அனைத்து பொருட்களும் மேலும் கீழுமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளன. “இத்தனை சிறிய வீட்டில் இருந்தா நமது வார்டு படிக்கிறார்கள்…!?” பெரும்பாலானவர்களது வீடுகள் சரியான சூரிய வெளிச்சம் கூட இல்லாத மிகவும் தாழ்வான கூரை வீடுகளாகவே இருந்தன. அங்கே அவர்களது பெற்றோர் அல்லது தாத்தா பாட்டியுடன் சற்றுநேரம் உரையாடிவிட்டு அவர்களிடம் அந்த வார்டை தொடர்ந்து படிக்கவைக்க வேண்டியதன் அவசியம் பற்றி வலியுறுத்திக்கூறி பின்னர் அங்கிருந்து விடைபெற்றோம்.

இதிலே நம் நண்பர் ராஜாவிற்கு நிகழ்ந்த அனுபவத்தைச் சொல்லியே ஆகவேண்டும். இவரும் இதேபோல வார்டின் வீட்டிற்குள் தவழ்ந்து சென்று உள்ளே போய் நின்றார். பின்னால் வந்த அவரின் வார்டு ரொம்ப கூலாக… “அண்ணா…! இந்தப்பக்கம் வந்து நில்லுங்க.. நீங்க நிக்கிறதுக்குப் பின்னால பாம்பு இருக்குது பாருங்க..” என்றான். “என்னாது..பா…பா…பா..பாம்பா…?!?!” அந்தப் பையனுக்கு அடிக்கடி பார்த்து பழகிவிட்டது போலும்.. ஏதோ Domestic Animal-ஐ பார்ப்பது போல அசால்ட்டாக இருந்தான். நம்மாளுக்குத்தான் என்ன செய்வதென்றே தெரியவில்லை.. வடிவேலு மாதிரி வெளியே முகத்தை கெத்தாக வைத்துக்கொண்டு உள்ளுக்குள் உதறியபடியே வெளியே வந்தார் 🙂

House Visit முடித்து அனந்தபுரம் திரும்பிய பின்னர் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு கிளம்பத் தயாரானோம். அப்போது ஒரு feedback session. எல்லோரும் தங்களது House visit பற்றி நெகிழ்ந்து கூறினார்கள். வாழையின் மீது அவர்களுக்கான பிடிப்பு அதிகரிக்க இந்த House Visit உதவியிருந்தது.

இப்போது chartered trip பஸ்ஸில் ஏறி விட்டோம் சென்னை நோக்கி பயணிக்க..! பிறகென்ன.. மீண்டும் ஆட்டம்..பாட்டம்தான். இந்தமுறை எல்லா உறுப்பினர்களின் பெயர் சொல்லும் பாடல்கள் இடம்பெற்றன. அப்படியும் காண்டீபன், ஸ்ரீவத்ஸவ் போன்ற கடினமான பெயர்கள் எங்களிடம் இருந்து தப்பித்தன. அதைத் தொடர்ந்து அனல் பறக்கும் Dumb charades! சென்னை வந்ததே தெரியவில்லை..அத்தனை உற்சாகமாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தது இந்தப் பயணம். இத்துடன் நமது முதல் ஒர்க் ஷாப் முடிவடைந்தது. நன்றி நண்பர்களே! மீண்டும் சந்திப்போம்.

வாழை – ஜூலை 2010 – முதல் ஒர்க் ஷாப் அனுபவங்கள் – பகுதி 2

வாழை – ஜூலை 2010 – முதல் ஒர்க் ஷாப் அனுபவங்கள் – பகுதி 1

“நாளை காலை 8 மணிக்குள் குளித்து ரெடியாகிவிடுங்கள். Breakfast முடித்துவிட்டு mentor & ward registration செய்ய வேண்டும். 9 மணிக்கு மாடியில் energy passing session-க்கு assemble ஆகவேண்டும்” என்று வெள்ளி இரவே பந்தாவாக அறிவித்து விட்டோம். காலையில் 5 மணிக்கு எழுந்தவர்களுக்கு பிரச்சினையில்லை. குளித்துவிட்டனர். 6 மணி அளவில் tank-ல் தண்ணீர் காலி. சரியாக அதே நேரத்தில் மின்சாரமும் சதி செய்தது. low voltage! எனவே மோட்டாரையும் ஆன் செய்ய முடியவில்லை. அப்படியே ஸ்தம்பித்தது மண்டபம். ஆங்காங்கே தோளில் டவலுடனும், கையில் paste-உடனும் சோகமாக நின்று கொண்டிருந்த நம் மக்களைப் பார்க்கையில் மிகவும் குற்ற உணர்வாகவே இருந்தது. தண்ணீர் இருக்குதோ இல்லையோ, முதல் நாள் இரவே water tank overflow செய்துவிட வேண்டும் என்பது நாங்கள் கற்ற முதல் பாடம்.

ஆபத்பாந்தவன்(!) முகுந்தன் திரு.விநாயகமூர்த்தி சாரிடம் அழைத்துச் சென்றார். அவர் மற்றும் திரு.மாவீரன் உதவியுடன் குளத்திலிருந்து வண்டிவைத்து தண்ணீர் கொண்டுவரப்பட்டது. (சென்னை@அனந்தபுரம்?!) ஒருவழியாக ‘காக்கா’ குளியலுக்குப் பிறகு அனைவரும் breakfast முடித்து (ஜெய் அண்ணா: “ரவையைக் கொஞ்சம் வறுத்துப் போட்டிருக்கலாம்” :-0 ) 9.15 மணிக்கெல்லாம் மாடியில் assemble ஆகினோம். அப்பொழுதுதான் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. நல்லவேளையாக தண்ணீர் பிரச்சனை workshop schedule-ஐ ரொம்பவும் பாதிக்கவில்லை.

welcome address-க்குப் பிறகு வழக்கம் போல முதல் Energy passing சொதப்பல்தான். முதல் ஒர்க் ஷாப்பில் இது எதிர்பார்க்கக் கூடியதே. காரணம் அதுபற்றிய புரிதல் எல்லோருக்கும் இருக்காது என்பதனால். பின்னர் ஜெய் அண்ணா அவர்கள் Energy passing பற்றியும் அது சக உறுப்பினர்களிடையேயான Trust மற்றும் Unity-ஐ எப்படி பலப்படுத்துகிறது என்பது பற்றியும் அழகாக விளக்கிக் கூறினார். அதைத் தொடர்ந்து செய்யப்பட்ட Energy passing ஒரளவு வெற்றி பெற்றது. அதன் பின்னர் ரமேஷ் மற்றும் பிரவீணா Do’s & Dont’s @ workshop பற்றிக் கூறினர். ஜெய் அண்ணாவும் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

பின்னர் 10.45 மணியளவில் புதிய உறுப்பினர்கள் எல்லாம் 6ஆம் வகுப்பு மாணவர்களுடன் இணைந்து play ground-ல் தங்களை அறிமுகம் செய்துகொள்ளும் நிகழ்வில் கலந்து கொண்டனர். அந்த நேரத்தில் 7வது, 8வது மாணவர்களில் யாருக்கெல்லாம் புதிய அண்ணா/அக்கா இருக்கப்போகிறார்களோ… (அப்படியென்றால் அவர்களின் பழைய அண்ணா/அக்கா இந்த ஆண்டு mentoring செய்ய இயலாத நிலை என்று அர்த்தம்!) அவர்களுக்கு ரமேஷ் & கௌரி rapport setting & trust building games நடத்தினார்கள். மற்ற 7வது, 8வது மாணவர்களுக்கு அந்த நேரத்தில் Level Identification Test நடந்தது.

அதே நேரத்தில், பயிலரங்கத்திற்கு வந்திருந்த மாணவர்களின் பெற்றோர்களிடம் அமுதரசன், பிரவீணா, முகுந்தன் முதலானோர் வாழை பற்றிய அறிமுகத்துடன் கலந்துரையாடல் நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர்களுக்கு ‘மலைத்தேன்’ குறும்படம் திரையிடப்பட்டது. அந்த கலந்துரையாடல் மிகவும் நன்றாக இருந்ததாக அதைப்பார்த்த நம் மக்கள் கூறினார்கள்.

மணி 11.45. வந்துவிட்டது Tea break! காசாளர் திரு.சதீஷ் அவர்கள் இல்லாமல் தள்ளாடிய உணவுத்துறைக்கு ஆதரவுக்கரம் நீட்டினார் guest visit செய்த முருகானந்தம் அண்ணா. Tea break-க்குப் பிறகு ஜெய் அண்ணா 6-ஆம் வகுப்பிற்கான ward-mentor allocation-ஐ நடத்தினார். ஒரு விளையாட்டாக நடக்கும் இந்த allocation-ஐ புதிய மாணவர்களோடு இணைந்து புதிய mentor-களும் ரசித்து மகிழ்ந்தனர்.

இந்த நேரத்தில் VSR சரவணன், ஸ்ரீவத்ஸவ் முதலானோர் 7வது, 8வது மாணவர்களில் ஒரு குரூப்பை தனியாக வைத்துக்கொண்டு என்னவோ சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தனர். என்ன அது?! இரவு 7 மணிக்குத் தெரியும் என்று சஸ்பென்ஸ் வேறு!

Lunch Break-க்குப் பிறகு 6-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜெய் அண்ணா தலைமையில் Trust Building games, அதைத் தொடர்ந்து Letter writing session நடந்தது. அதன் பின் ward-mentor இடையே one-to-one session நடந்தது. இது இருவரும் ஒருவரையொருவர் அறிந்துகொள்ள உதவும் ஒரு அமர்வாகும்.

இதே நேரத்தில், 7ஆம், 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களது தகுதிநிலை (Level) அடிப்படையில் மூன்று குழுக்களாகப் பிரித்து தமிழ் அமர்வு (Tamil Session) நடந்தது. அதைத் தொடர்ந்து Tea Break வரை English Session-ம் நடந்தது. English Session-ல் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம் session owners எல்லோர் கழுத்திலும் ஒரு அட்டையைத் தொங்க விட்டார்கள். அதற்கு neck-tie என்று பெயர் சொன்னார்கள். ஆங்கிலத்தில் எளிமையான மூன்று அல்லது நான்கெழுத்து வார்த்தை, கீழே அதன் தமிழ் அர்த்தம் என்று எழுதப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட நாற்பது வார்டுகளும் அந்த neck-tie கட்டிக்கொண்டு அன்று முழுவதும் உலா வருவதால் அவற்றில் பெரும்பாலான வார்த்தைகள் அவர்களுக்குப் பரிச்சயமாகிவிடும் என்பது நம்பிக்கை.

மாலை நேரம் சுண்டல் மற்றும் Tea-க்குப் பிறகு ஆங்கிலம் தொடர்ந்தது. பின்னர் 7 மணியளவில் அனைவரும் Dining Hall-ல் assemble ஆகினோம். ஏனென்றால் இது Drama நேரம்! மேலே சொன்னபடி VSR சரவணன், ஸ்ரீவத்ஸவ், அருண் பாலாஜி போன்றோர் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வைத்திருந்தனர். அதன்படி மாணவர்களே இப்போது நடித்துக்காட்டப் போகிறார்கள்… அதுவும் ஆங்கிலத்தில்! (பார்றா!) அதோடு மணிகண்டனின் கைவண்ணத்தில் உருவான அறிவியல் நாடகமும் அரங்கேறியது. அனைத்து நாடகங்களும் பலத்த வரவேற்பைப் பெற்றன. இதைப் பார்த்துக் கொண்டிருந்த 6-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு (இல்லையில்லை…அடுத்த பயிலரங்கிலேயே) நாமும் மேடையேற வேண்டும் என்ற ஆர்வம் பொங்கியிருக்கும் என்று நம்புகிறேன்.

அடுத்தது Dinner. அத்தோடு மாணவர்களை விட்டுவிடுவதாக இல்லை (படித்துக் கொண்டிருக்கும் உங்களையும்தான்:-0). ஒசூரில் இருந்து Science Expert திரு.சேதுராமன் அவர்கள் சொன்னபடி வந்து விட்டார். அவர் science video ஒன்று காட்டலாம் என்று சொன்னார். காலையில் இருந்து ஓயாமல் உழைத்திருக்கும் நம் வார்டுகள் டயர்டாக இருப்பார்களே.. என்று எங்களுக்கோ ஒரு தயக்கம். அவரோ உறுதியாக “அதெல்லாம் பண்ணிரலாம் பாருங்க” என்றார். உடனே திரையிட ஏற்பாடு செய்யப்பட்டது. அது tamilnadu science forum வெளியிட்டுள்ள Universe பற்றிய video. பிரமிப்பூட்டிய அந்த வீடியோ நம் மாணவர்களுக்கு புரிந்திருக்குமா என்ற சந்தேகம் எங்களுக்குள் எழுந்தது. ஆனால் video முடிந்ததும் திரு.சேது அவர்கள் மாணவர்களை சில கேள்விகள் கேட்க அதற்கு அவர்கள் ஆர்வமுடன் பதில் சொன்னதைப் பார்த்து நாங்கள் அதிசயித்துப் போனோம் என்பதுதான் உண்மை.

இத்துடன் முதல்நாள் ஒர்க் ஷாப் இனிதே நிறைவ…. இருங்க இருங்க.. இன்னும் ஒன்னே ஒன்னு.. பசங்களைத் தூங்க வசதி செய்து தந்துவிட்டு நாங்கள் (வாழை மக்கள்) எல்லாம் மாடியில் assemble ஆனோம் Feedback session-க்காக. காலை நேர தண்ணீர் பிரச்சினை விஸ்வரூபம் எடுக்குமோ என்று பயந்து இருந்தேன். நல்லவேளை, யாரும் அதை பெரிதுபடுத்தவில்லை. ஆங்காங்கே சொன்ன சில திருத்தங்களையும், ஆலோசனைகளையும் சிரமேற்கொண்டு குறித்துக்கொண்டார் ‘உளவுத்துறை’ விவேக். நண்பர் ஒருவர், ‘நாளை Tea-க்கு பதிலாக Lemon juice தரலாமே’ என்றார். “அவ்வளவுதானே…செய்துடுவோம்..” என்று உடனடி approval தந்தது உணவுத்துறை. இப்படியாக முதல் நாள் இனிதே முடிவடைந்தது. நாளைய activities-களில் முக்கியமானது House Visit. அதிலே விறுவிறுப்பு, காமெடி, சென்டிமென்ட் என அனைத்து அம்சங்களும் நிறைந்திருந்தன.. அதுபற்றி “நாளை பார்க்கலாம்” (அதாவது பகுதி 3-ல் பார்க்கலாம்)

வாழை – ஜூலை 2010 – முதல் ஒர்க் ஷாப் அனுபவங்கள் – பகுதி 3

வாழை – ஜூலை 2010 – முதல் ஒர்க் ஷாப் அனுபவங்கள் – பகுதி 1

உலகக்கோப்பை கால்பந்தில் என்னுடைய கணிப்புகள் எல்லாம் உதைக்கு மேல் உதை வாங்கியதால் ஒடி ஒளிந்து கொண்ட நான் இப்போதான் திரும்பி எட்டிப்பார்கிறேன். இது வாழை என்னும் NGO பற்றிய பதிவு.
வாழை அமைப்பு பற்றி அறிந்திராதவர்கள் இதுபற்றிய எனது முந்தைய பதிவை இங்கே
பார்க்கவும்

கடந்த வாரம் ஜுலை 24, 25 தேதிகளில் விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரத்தில் இந்தக் கல்வியாண்டுக்கான முதல் பயிற்சிப்பட்டறை (Workshop) நடைபெற்றது. ஜுலை 23 வெள்ளி இரவு 9 மணிக்கெல்லாம் சென்னையிலிருந்து “எங்களுக்கே எங்களுக்கு” என்று தனியாக ஒரு அரசுப்பேருந்தை எடுத்துக்கொண்டு கிளம்பினோம். ஆரம்பத்தில் கொஞ்ச நேரம் நாளை ஒர்க் ஷாப்பில் நம்ம டீமில் என்ன செய்யப்போகிறோம் என்று குருப் குரூப்பாக சீரியஸாக டிஸ்கஸ் பண்ணிக்கொண்டிருந்தார்கள். செங்கல்பட்டு நெருங்குகிற சமயம் திடீரென்று பின்னால் இருந்து ஒரு சத்தம்.. இரைச்சல்..கூச்சல்…அல்லது பாட்டு…எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். அது கேட்பவர்கள் விருப்பத்தைப் பொருத்தது. முன்னால் உட்கார்ந்து attendance papar-ஐ பார்த்துக் கொண்டிருந்த என் உச்சி மண்டையில் சுர் என்றது. அப்படியே அதையெல்லாம் போட்டுவிட்டு, பின்வாசல் அருகே சென்று நானும் ஜோதியில் ஐக்கியமானேன். கெளரிசங்கர் விரும்பும் எம்ஜிஆர் பாடல் முதல் விக்னேஷ் விரும்பும் விஜய் பாடல் வரை அனைத்தும் “பாடப்பட்டன”. சில பாடல்களின் இடையே உள்ள BGM கூட மறக்காமல் வாயிலேயே வாசிக்கப்பட்டது. என்னே இசை ஞானம் நம் வாழை மக்களுக்கு! இந்தக் காட்டுக்கத்தலையும் பொருட்படுத்தாது தூங்கிக்கொண்டிருந்த கும்பகர்ணர்களை என்னவென்று சொல்வது!

ஒருவழியாக அர்த்தராத்திரி ஒரு மணிக்கு பேருந்து அனந்தபுரம் வந்து சேர்ந்தது. மெயின்ரோட்டிலேயே டிரைவர் பஸ்ஸை நிறுத்திவிட்டு இதுக்கு மேல் போகாது என்று சொல்லிவிட்டார். அங்கிருந்து அரைகிலோ மீட்டர் தூரம் போகணும். நடப்பதில் பிரச்சினையில்லை. லக்கேஜ் ஒரு ‘மினி’ மூட்டை இருந்தது. எப்படியும் 20 கிலோ இருக்கும். அந்த நேரத்தில் வண்டி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. சளைக்கவில்லையே நம் நண்பர்கள்..! முருகன், விஸ்வா, விக்னேஷ், ஸ்ரீவத்ஸவ் மாற்றி மாற்றி கொண்டுவந்து விட்டனர். இடையில் நானும் முயற்சித்துப் பார்த்தேன். யப்பா.. என்ன கணம்! நன்றி முருகன் & கோ.

மண்டபத்திற்குள் வந்ததும் குடி தண்ணீர், Mosquito Liquid எல்லாம் ரெடியாக இருந்தது. ஏற்கனவே முகுந்தன் சொல்லி வாங்கி வைக்கச் சொல்லிவிட்டார். என்ன ஒரு திட்டமிடல்! பெண்களுக்கான தங்குமிடத்திற்கும் இவைகளெல்லாம் சப்ளை செய்யப்பட்டது. பின்னர் நான் நண்பர் ரவிக்குமாரை அழைத்துக்கொண்டு தூங்கலாம் என்று நகர… என்னை விச்சு மற்றும் முகுந்தன் அழைத்து, “நாளை (இல்லையில்லை இன்று) காலை முதல் இரவு வரை என்ன Schedule போட்டிருக்கிறாய் சொல்” என்று பிடித்துக்கொண்டனர். இது என்னடா மதுரைக்கு வந்த சோதனை.. “அர்த்த ராத்திரியில் அப்டேட்டா” என்று என்னையே நான் நொந்துகொண்டு ஒவ்வொன்றாக சொல்ல ஆரம்பித்தேன். அந்த நேரத்தில் மாடியில் பெண்கள் தங்கியிருக்கும் பகுதியில் இருந்து சில கூக்குரல்கள் ஸாரி..குயில்குரல்கள். “செந்தமிழ் நாடிது..எங்கள் செந்தமிழ் நாடிது” என்று கோரமாக… மறுபடியும் ஸாரி.. கோரஸாக பாடிக்கொண்டிருந்தார்கள்.

நள்ளிரவு இரண்டு மணிக்கு நம் தாய்த்தமிழ்ப் பெண்டிருக்கு இருக்கும் தமிழ்ப்பற்று கண்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். இது ஒருவேளை பஸ்ஸிலே நாங்கள் பாடி(?)யதற்கு பழிக்குப்பழியாகக் கூட இருக்கலாம். எது எப்படியோ..! இந்த நேரத்தில் இப்படி இ(ம்)சைப்பது(?!) மற்றவர்களுக்கு தொந்தரவாக அமையும் என்பதால், முகுந்தன் போனை எடுத்து அன்பரசி மேடமுக்கு கால் செய்தார். நீண்ட நேரம் ரிங் போனதற்கு பின்னர் அவர் போனை எடுக்க..முகுந்தன் அவரிடம், “மேடம்.. காலையில சீக்கிரம் எழுந்திருக்கணும் இல்லையா…அதுனால போதும். பாட்டெல்லாம் வேண்டாம். தூங்குங்களேன்” என்றார். அதற்கு அன்பரசி மேடம், “ஹலோ.. நான் ஏற்கனவே தூங்கியாச்சு..அங்க வேற ஒரு குரூப்தான் பாடிக்கிட்டு இருக்காங்க.. தூங்குறவங்களை எழுப்பி தூங்குன்னு சொல்றீங்களே..” என்று சொன்னாரே பார்க்கலாம். முதல் பல்பு வாங்கிவிட்டோம்.

அப்புறம் சரி நாம நம்ம வேலையப் பார்க்கலாம்னு Schedule பத்தி டிஸ்கஸ் செய்து வேண்டிய இடத்தில் சில திருத்தங்களும் செய்தோம். ஆங்.. சொல்ல மறந்துட்டனே… மண்டபத்துக்குள்ள நுழைந்ததுமே முகுந்தன் ஒரு check list கொடுத்து அது எல்லாம் பார்த்துக்கொள்ளச் சொன்னார். தினேஷ், முஜீப் மற்றும் அடியேன் ஆகியோர்தான் அதற்கு பொறுப்பு. EB Reading எடுத்துக்கொண்டோம். நாளைய ஒர்க் ஷாப்புக்குத் தேவையான materials இருக்கிறதா என்று உறுதி செய்து கொண்டோம். பாத்ரூமில் தண்ணீர் வருகிறதா என்று பார்த்து அதையும் உறுதி செய்து கொண்டோம். இங்குதான் பிரச்சினையே.. நாளை விடியும்போதே எங்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கும் என்று அப்போது நாங்கள் நினைக்கவில்லை. அது…. அடுத்த பதிவில்.

வாழை – ஜூலை 2010 – முதல் ஒர்க் ஷாப் அனுபவங்கள் – பகுதி 2