இலங்கை – என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?

இறுதிக் கட்டப் போரின்போது, இலங்கையில் நடந்தது என்ன என்பது பற்றி வலைப்பூ உலகில் பெரும் விவாதமே நடந்து வருகிறது.  “சரணடைவு” என்ற பெயரில், நடேசனை நயவஞ்சகமாகக் கொன்றார்கள், அதற்கு இந்தியாவிலிருந்தே சிலர் துணை போனார்கள் என்ற அதிர்ச்சித் தகவல்களும், அந்த நயவஞ்சகர்கள் இவர்கள்தான் என்று சிலரைச் சுட்டியும் விவாதங்கள் நீள்கிறது. 

இலங்கையில் என்ன நடந்தது என்பதை விட, இனியாவது என்ன நடக்க வேண்டும் என்று யாராவது யோசிப்பார்களா? அன்று அந்தமான் சிறைகளில் தமிழனைக் கொன்றார்கள். இன்று மானிக்ஃபார்ம் முகாம்களில்…. அய்யகோ.. என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்? என்று எமது இன்னல்கள் தீர்ந்து பொய்யாகும்?

Advertisements

வரவேற்கிறது வாழை. (mentors தேவை)

சாப்ட்வேர் துறையில் உள்ளவர்கள் weekend ஆனால் ECR, Pub, டிஸ்கொதே என்று ஊர் சுற்றுகிறார்கள். நம் கலாச்சாரத்தையே கெடுக்கிறார்கள் என்று குற்றம் சாட்டும் கும்பல் நிறையவே இருக்கிறது. ஆனால் உண்மையில் சாப்ட்வேரில் இருப்பவர்கள் வார விடுமுறை நாட்களில் என்ன செய்கிறார்கள்?

நாங்கள் (பெரும்பாலும்) சாப்ட்வேர் துறையைச் சேர்ந்த நண்பர்கள் ஒன்றிணைந்து “வாழை” என்ற அமைப்பின் மூலம், கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்கு சென்று வறுமைக் கோட்டுக் கீழ் உள்ள, படிக்க ஆர்வமிருந்தும் வாய்ப்பில்லாத, முதல் தலைமுறையாகக் கல்வி கற்கும் மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு அந்த ஆண்டு முழுவதும் ஒரு வழிகாட்டியாக இருக்கிறோம். இதற்காக நாங்கள் ஒதுக்குவது வருடத்திற்கு வெறும் 12 நாட்களே. (6 weekends) மற்றபடி கடிதம் மூலமும்,  தொலைபேசி மூலமும் அவர்களுக்கு ஆண்டுமுழுவதும் வழிகாட்டுகிறோம். இதுவரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனந்தபுரம் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயனடைந்துள்ளர்கள். கடந்த நான்காண்டுகளாகத் தொடரும் இந்த சேவை இதனைப் படிக்கும் உங்களைப் போன்ற துடிப்புள்ள இளைஞர்கள் மூலம் வாழையடி வாழையாகத் தொடரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு நிறையவே உள்ளது. 

(1:1) ஒரு மாணவருக்கு (ward) ஒரு வழிகாட்டி (mentor) என்ற அடிப்படையில் சுமார் 70 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
இப்போது பிரச்சினை என்னவென்றால், இதில் கிட்டத்தட்ட 30 பேர் மட்டுமே மாணவிகள். (Lady wards). அவர்களுக்கும் கூட 1:1 என்ற விகிதத்தில் mentors இல்லை. சுமார் 12 Lady mentors மட்டுமே தற்போது வாழையில் active-ஆக உள்ளனர். ஒருவரே இரண்டு, மூன்று மாணவியருக்கு அந்த ஆண்டு முழுவதும் வழிகாட்டுவது என்பது, பணியில் இருக்கும் mentorகளுக்கு சிரமமான விஷயம்தான். எனவே கல்விச் சேவையில் ஆர்வமுள்ள Lady mentors அன்புடன் வரவேற்கப்படுகிறார்கள். “அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், அன்ன யாவினும் புண்ணியம் கோடி, ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” என்பது பாரதியின் வாக்கு. ஏழை மட்டுமல்ல, வழிகாட்ட யாருமின்றி குடும்பத்தில் முதல் தலைமுறையாகக் கல்வி கற்கும் மாணவ மாணவியருக்கு வழிகாட்ட நாம் இருக்கிறோம் என்றால் அதை விட ஆத்ம திருப்தி வேறு ஏது? இங்கே கற்பிக்க மட்டுமல்ல.. கற்றுக் கொள்ளவும் நிறைய இருக்கிறது. 

 மேலும் விவரங்களுக்கு: www.vazhai.org

Check http://www.youtube.com/watch?v=xTl6MJTzWlY

Points to be noted on vazhai’s activities:

  1. வாழையானது பணமாகவோ, பொருளாகவோ எந்த உதவியும் ward-களுக்கு செய்வதில்லை.
  2. ஏற்கனவே 100க்கு 90 எடுக்கும் மாணவர்களாகப் பார்த்து தேர்ந்தெடுத்து, அவனை 100 க்கு 100 எடுக்க வைக்கும் “சாதனைகளை” செய்யப் போவதில்லை.
  3. பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கியிருக்கும் அவர்களின் குடும்பங்களை உடனே முன்னுக்கு கொண்டுவர வேண்டும் என்ற பெரிய லட்சியங்களோடு எல்லாம் செயல்படுவதில்லை.

வாழையின் இலக்கு மிகவும் எளிதானது. எப்படியோ தட்டுத் தடுமாறி, யார் யாரோ நமக்கு உதவியோ, உதவாமலோ ஒரு வழியாக கல்வியின் மூலம் நாம் இன்று  நல்ல வேலையில் இருக்கிறோம். அதற்கு ஒரு நன்றிக் கடனாக கல்வியும் உதவியும் முறைப்படி கிட்டாத முகம் தெரியா மனிதர்களுக்கு வழிகாட்டுவோம். அதிலும் ஆனந்தம் கொள்வோம்.

நீங்களும் ஆர்வமாக இருப்பின் தயவுசெய்து தொடர்பு கொள்ளவும்.

நன்றியுடனும் நம்பிக்கையுடனும்,
அ. சரவணன்.

Bachelor-கள் weekend-ல் என்ன செய்கிறார்கள்?

 Bachelor- களில் கிட்டத்தட்ட 90 விழுக்காடு பேர் விடுமுறை நாள் என்றால் காலை 10 மணிக்கே துயில் எழுவார்கள், அதுவும் பசி வயிற்றைக் கிள்ளும் என்பதால். (பசியையும் அடக்கிக்கொண்டு 12 மணிவரை தூங்கும் சில ஜெகஜாலக் கில்லாடிகளும் உண்டு). அப்படி இப்படி ஒருவழியாக சோம்பல் முறித்து பல் துலக்கி,  கடைக்கு சென்று டீ/காபி சாப்பிட்டு அந்த எஃப்பெக்டில் கக்கா சென்று பின் குளிக்கலாமா வேண்டாமா என்று டாஸ் போட்டுப் பார்த்து (அது எப்படிங்க எப்பவும் டாஸ்ல ‘வேண்டாம்’னே வருது)… இதெல்லாம் முடிக்கறதுக்கே பதினொன்னு, பதினொன்னரை ஆயிடும். அதுக்கப்புறம் ஒரு வழியா கையேந்தி பவன் போனா அங்க டேபிள், சேரை கவுத்துப் போட்டுட்டு உக்காந்து மத்தியான சாப்பாட்டுக்கு வெங்காயம் அறிஞ்சிட்டு இருப்பாங்க .  ஹும்.. அப்படியே நடந்து நம்ம நாயர் டீக்கடையில மறுபடியும் ஒரு டீயும், பிஸ்கட்டும் சாப்பிட்டுட்டு (இப்ப எந்த எஃப்பெக்டும் தராதான்னு கேக்காதீங்க) வீடு வந்து சேர்ந்தா மணி 12. கொஞ்ச நேரம் நம்ப தினமலரையும், தினத்தந்தியையும் புரட்டி எடுத்துட்டு வாரமலர் கிசு கிசு, குறுக்கெழுத்து.. இன்ன பிற syllabus முழுக்க கவர் பண்ணி முடிச்சா…. ஆச்சு லஞ்ச் டைம்.  நல்லா மூக்கு பிடிக்க சாப்பிட்டுட்டு ஒரு தூக்கத்தைப் போட்டா 6 மணிக்குத்தான் முழிப்பே வரும். அப்புறமா போய் நாயர் கடையில ஒரு டீயும், (தம் அடிக்கிறவங்க தம்மும்) போட்டுட்டு “அப்புறம் மாப்ள.. எங்க போலாம்…”-ன்னு டயலாக்க போட்டா, “போர் அடிக்குதுடா.. வா பாண்டி பஜார் போகலாம்”-னுவான். ரயிலப் பிடிச்சு மாம்பலம் போய், ரெங்கநாதன் தெருவுல நீந்தி, உஸ்மான் ரோடு வழியா பாண்டி பஜார் போய்.. ஒரு பஞ்சாபி குல்பிய வாங்கி வாயில வச்சுக்கிட்டு ஒரு மணிநேரம் தேமேன்னு சுத்திட்டு ரிடர்ன் அடிப்போம். நைட்டு கையேந்தி பவன் போய் பரோட்டா சாப்டுட்டு வீடு வந்து சேர்ந்தா ஆச்சு மணி 11. “அச்சச்சோ… துணி துவைக்கலையே…”. அடிச்சு புடிச்சு துணியெல்லாம் ஊர வச்சுட்டு சிஸ்டத்துல ஒரு படத்த போட்டு உக்காந்துருவோம். படத்த ஓட்டி ஒட்டி பாத்துட்டு, மூச்சு வாங்கத் துணி துவைத்து முடிச்சா மணி நள்ளிரவு 2 மணி. ஆவ்வ்..  Ok. Goodnight.

global warming-ஐ சமாளிக்க புது வரியா..?

புவி வெப்பமயமாதல் (global warming) பற்றிய விழிப்புணர்வே பலருக்கு இல்லாத நிலையில், ஒரு புது வரியின் மூலம் நிதி திரட்டி global warming-ஐ சமாளிக்கலாம் என்ற யோசனை G20 மாநாட்டில் முன்வைக்கப்படப் போகிறது. இது  அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் முடிச்சு போடுவது போல உள்ளது.

புவி வெப்பமடைவதைத் தடுக்க மாற்று எரிபொருட்களான காட்டாமணக்கு, புங்கை (உயிர்ம எரிபொருட்கள்) முதலியவற்றை இந்தியாவில் இருக்கும் பல லட்சம் சதுர கிலோமீட்டர் தரிசு நிலங்களில் பயிரிடலாம்.   நீர்ப்பாசியானது காட்டாமணக்குவைக் காட்டிலும் மிகுந்த திறன் வாய்ந்தது. ஆனால் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள்தான் அதுபற்றி சொல்ல வேண்டும். அதே சமயம் அத்தியாவசிய உணவு தானிய விளை நிலங்களை அழித்து அதில் உயிர்ம எரிபொருட்கள் பயிரிடப்படும் ஆபத்து நேராதிருக்க வேண்டும்.  அதற்கான முன்முயற்சிகளில் இந்திய அரசாங்கம் ஈடுபட்டால் இந்தியாவின் பொருளாதாரமும் உயரும். எரிபொருளுக்காக அரேபிய நாடுகளை ஒரேயடியாக சார்ந்திருக்க வேண்டிய சிக்கலும் குறையும். புவி வெப்பமடைதலும் தவிர்க்கப்படும். இமயமலையும் காப்பாற்றப்படும். இதெல்லாம் இந்த அரசாங்கம் செய்யுமா? மக்களுக்கு விழிப்புணர்வு வருமா? அதை விடுத்து கிஸ்தி, திரை, வரி, வட்டி என்றால்.. இன்னொரு கட்டபொம்மன் தோன்றுவான். எச்சரிக்கை.

பிள்ளையார் சுழி

உ.

மேற்கண்டது (உ) பிள்ளையார் சுழி என்று வைத்துக் கொள்ளவும். கணினியில் என்னால் பிள்ளையார் சுழியை இப்படித்தான் போட முடியும். இது என்னுடைய முதல் படைப்பு. எனவேதான் பிள்ளையார் சுழிக்கு விசை பலகையில் ஏதேனும் வழி இருக்கிறதா என்று தேடிப் பார்த்தேன். சரி.. இந்த keyboard -ஐ கண்டுபிடித்தவனுக்கு பிள்ளையார் சுழிதான் தெரியாது. atleast + (சிலுவையாவது) கொடுத்திருக்கலாம்.

போகட்டும் விடுங்கள்.  ஏதோ நானும் சுழியைப் போட்டு ஆரம்பித்து விட்டேன். ஆனால் எழுதுவதற்குத்தான் ஒரு வழியும் இல்லை. சரி.. இதையே கேட்போம். இந்த பிள்ளையார் சுழி போடும் பழக்கம் எப்படி வந்தது? (கி.மு பதினெட்டாம் நூற்றாண்டில்…… போன்ற கதையெல்லாம் வேண்டாம்).  முழுமுதற் கடவுள் பிள்ளையார் தெரியும். ஆனால் இந்த சுழியை எங்கிருந்து பிடித்தார்கள். எனக்கு தெரிந்த சுழி எல்லாம் என் தலையில் இருக்கும் சில வணங்காமுடிகள்தாம்!

 

என்றும் அன்புடன்,
சரவணன்.