Archive for the ‘விளையாட்டு’ Category

கால்பந்தும் இந்தியாவும்

தற்போது நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றுவரும் சத்யன் நினைவு கால்பந்து போட்டிகளை காணச் சென்றிருந்தேன். ஸ்டேடியத்தின் இருக்கைகள் ஒரு பாழடைந்த தியேட்டரில் உள்ளதைப்போல் இருப்பது ஒருபக்கம் இருக்கட்டும். 40000 பேர் உட்கார வசதியுள்ள அந்த ஸ்டேடியத்தில் இருந்தது வெறும் சுமார் 200 பேர் மட்டுமே. நினைத்தாலே கஷ்டமாக இல்லை..? மக்களே கால்பந்தை கண்டுகொள்ளவில்லையென்றால் அரசாங்கம் மட்டும் எப்படி வளர்த்துவிடும்? ஸ்பான்சர்கள் கூட ஆச்சி மசாலா, வாசன் ஐ கேர் போன்ற சிறிய நிறுவனங்களே. கிரிக்கெட்டுக்கு கொட்டிக் கொடுக்கும் பெப்ஸி, கோக் அல்லது மொபைல் தயாரிக்கும் அன்னியர்களோ, ரிலையன்ஸ் போன்ற இந்திய பெரு வணிக நிறுவனங்களோ ஸ்பான்சர் செய்ய ஏன் முன்வரவில்லை…? காரணம் ரொம்ப சிம்பிள்..! மக்கள் அந்த விளையாட்டைப் பார்ப்பதில்லை… அதனால் ஸ்பான்சர்களும் அந்த வீரர்களைப் பார்ப்பதில்லை.

கால்பந்து திருவிழா 2010

உலகிலேயே அதிக ரசிகர்களைக் கொண்ட உலகக்கோப்பை கால்பந்து திருவிழா கோலாகலமாக தென்னாப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இந்த விளையாட்டில் தென்னாப்பிரிக்கா minnows என்று சொல்லப்படும் கத்துக்குட்டிதான் என்றாலும் மைதானத்தில் குவிந்திருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை ஆச்சரியமூட்டுகிறது. (அவர்களெல்லாம் ஐபிஎல்-ஐ விட கால்பந்துக்குத்தான் முக்கியத்துவம் தருகிறார்கள்)

இந்த முறை ஆர்ஜென்டினா, பிரேசில் இடையேதான் இறுதிப்போட்டி இருக்கும் என்பது பெரும்பாலான கால்பந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பு. நடப்புச்சாம்பியன் இத்தாலி ஸ்பெயினிடம் ‘உதை’ வாங்கி காலிறுதியிலேயே வெளியேறிவிடும் என்பது என் எதிர்பார்ப்பு. நமக்கு இருக்கும் ஒரு சாதகமான அம்சம் நாமெல்லாம் இந்தியர்கள். எனவே எந்த அணி ஜெயித்தாலும் தோற்றாலும் டென்ஷன், பிளட்பிரஷர் எல்லாம் இல்லாமல் கூலாக ஆட்டங்களை கண்டுகளிக்கலாம். உங்களுக்கு ஒன்று தெரியுமா..?கடந்த முறை இத்தாலிதான் என் favourite. இறுதியில் அதுவே கோப்பையை வென்றது. இப்போது என் ஓட்டு ஆர்ஜென்டினாவுக்கே. நைஜீரியாவுக்கெதிரான முதல் போட்டியில் அவர்கள் ஆடிய விதமே அசத்தியது. எதிராளியின் சட்டையை பிடித்து இழுப்பது, காலை தட்டி விடுவது போன்ற முரட்டுத்தனமான ஆட்டம் இல்லை. மிகவும் நேர்த்தியாக பந்தை கடத்துவதும், தன் எல்லைக்குள் எதிராளியின் ஆதிக்கத்தைத் தடுப்பதும் என சாமர்த்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். போதாக்குறைக்கு இந்த அணிக்கு பயிற்சியாளர் மாரடோனா. கால்பந்து உலகின் சச்சின். எனவே..இந்த ஆண்டு “அசத்தப்போவது ஆர்ஜென்டினாவே”. என் கணிப்புப்படி பிரேசில், ஆர்ஜென்டினா, ஸ்பெயின் இவற்றோடு நான்காவதாக இங்கிலாந்து அல்லது பிரான்ஸ் அரை இறுதிக்குத் தகுதி பெறலாம். எல்லா போட்டிகளையும் பார்க்க முடிவதில்லை. இரண்டாம் சுற்று ஆட்டங்களில் இருந்து எழுதுகிறேன். நன்றி. – அ. சரவணன்.

தாக்கரே Vs சச்சின் ; திமுக Vs ரகுமான்

சச்சின் எதற்கு அப்படிப் பேச வேண்டும்?  “நான் ஒரு மகாராஷ்டிரன் என்பதற்காகப் பெருமைப்படுகிறேன். ஆனாலும், முதலில் நான் இந்தியன்” என்பதோடு நிறுத்தியிருக்கலாம்.  ஆனால் தொடர்ந்து, “மும்பை நகரம் இந்தியர் யாவருக்கும் உரியது” என்று உள்குத்தோடு(!) ஏன் சொல்ல வேண்டும். அந்த வரி “மும்பை நகரம் மகாராஷ்டிரர்களுக்கே உரியது” என்று சொல்லி வரும் சிவசேனாக்களையும், நவநிர்மாண்களையும் மறைமுகமாக கிண்டல் செய்வதாகத்தானே அர்த்தம்.

அதனால்தானே பால் தாக்கரே “அரசியல் பேச்சுகள் வேண்டாம்” என்று கண்டிக்கிறார். சச்சின் கூறியது முழுக்க முழுக்க சரியே என்பதில் மாற்றுக்கருத்துகள் இல்லை. ஆனாலும் சர்ச்சைக்குரிய வகையில் ஏன் பேச வேண்டும்? உதாரணத்திற்கு ஏ.ஆர்.ரகுமானை எடுத்துக்கொள்வோம். அவருக்கும் ஆளும் திமுக அரசுக்கும் இடையே கொஞ்சம் பிணக்கு இருப்பது தெரிந்ததே. ஆனாலும் அவர் அரசியல் சம்பந்தமான பேச்சுகளை நாசூக்காக தவிர்த்து விடுவார். ஆஸ்கார் விருது வாங்கியதற்காக அரசு சார்பில் விழா எடுக்கிறோம் என வேண்டாவெறுப்பாக பலநாட்கள் கழித்து ரகுமானுக்கு ஒரு அழைப்பை விடுக்க, அதை அவர் “நேரம் கிடைக்கவில்லை” என சாமர்த்தியமாக தவிர்த்தார். ரகுமானும் சச்சினும் தத்தமது துறைகளில் சிகரத்தைத் தொட்டவர்கள். அவர்களுக்கு அரசியல் தேவையில்லை. இது ரகுமானுக்கு புரிந்திருக்கிறது. சச்சினுக்கும் புரியும்.

அதுசரி… பால் தாக்கரே, ராஜ் தாக்கரே போன்றோர் இன உணர்வை வைத்து அரசியல் செய்வது சரியா என்ற கேள்வி வரும். சரிதான் என்று என் நண்பர்கள் சிலரும் சொல்கிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை அவர்களின் பேச்சுகள் ஒதுக்கப்பட வேண்டியவை.

தமிழகத்தில் மற்ற மாநில மக்கள் வந்து வேலை செய்வதைக் கண்டு நாம் கோபம் கொள்வதில்லை. (கோபம் கொள்ளக்கூடாது) மாறாக, பெருமை கொள்கிறோம். “எங்கள் பூமி உங்களை வாழவைக்கிறது, வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்” என்று பெருமையோடு சொல்லுவோம். அந்தப் பரந்த மனப்பான்மை தாக்கரேக்களிடம்  இல்லை என்பதுதான் பிரச்சினை.  “வாழு, வாழ விடு”.