Archive for the ‘பொது’ Category

குளித்தலை – இது எங்கள் ஊர்

குளித்தலை
குளித்தலை (ஆங்கிலம்:Kulithalai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கரூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

பெயர்க்காரணம்
காவிரிக் கரையோரம் நன்செய் நிலங்களும், மலர்ச்சோலைகளுமாய் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக கடம்பவனம் எனும் சிற்றூர் அமைந்திருந்தது. அப்பகுதி “குளிர் தண்டலை” என்று அழைக்கப்பட்டது. அதுவே பின்னர் “குளித்தலை” என்றாகியது.

எல்லைகள்
வடக்கில் முசிறி, கிழக்கில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், தெற்கில் (முறுக்கு புகழ்) மணப்பாறை, மேற்கில் கரூர் மாவட்டம் ஆகியவை குளித்தலையைச் சுற்றியுள்ள ஊர்களாகும்.

தொழில்கள்
காவிரித்தாயின் அரவணைப்பில் இருப்பதால் விவசாயமே முதன்மைத் தொழிலாகும். நிறைந்த மண்வளமும் நீர்வளமும் இருப்பதால் வாழை, கரும்பு, நெல் மற்றும் வெற்றிலை என நன்செய் பயிர்கள் அலங்கரிக்கும். குறிப்பாக வாழையே இங்கு அதிகம் பயிரிடப்படுகிறது. குளித்தலைக்கு மேற்கே லாலாப்பேட்டை என்ற ஊரிலிருந்து கிழக்கே நங்கவரம் வரையிலான பகுதிகளில் பயிரிடப்படும் பல்வேறு தரப்பட்ட வாழை ரகங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கு மட்டுமல்லாது, அண்டை மாநிலங்களாகிய கேரளா, கர்நாடகாவிற்கும் ஏற்றுமதியாகிறது.

குளித்தலையின் கிழக்கே பத்து கிலோமீட்டர் தொலைவில் பெட்டவாய்த்தலை என்னும் ஊரில் சர்க்கரை ஆலை உள்ளது. எனவே வாழைக்கு அடுத்தபடியாக கரும்புக்குத்தான் இங்கே முக்கியத்துவம். நெல் குறைந்த அளவிலேயே பயிரிடப்படுகிறது. காவிரியின் அக்கரையில் உள்ள மண்ணச்சநல்லூரில்தான் நெல் பிரசித்தம்.

விவசாயத்திற்கு அடுத்தபடியாக இப்பகுதியில் செயற்கை வைரம் பட்டை தீட்டும் தொழில் பரவலாக உள்ளது. மேற்கே 20 கி.மீ தொலைவில் மாயனூர் என்னும் ஊரில் சில தொழிற்சாலைகள் உள்ளன. மற்றும் கரூர் நகரில் எண்ணற்ற தொழிற்சாலைகள் உள்ளன. இவையே குளித்தலைவாழ் அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் தொழில் ஆதாரம்.

சிறப்புகள்
காவிரித்தாய் குடகு தொடங்கி பூம்புகார் வரையிலான தன் ஓடுபாதையில் இங்கு மட்டும்தான் அகண்ட காவிரியாக (2 கி.மீ) செல்கிறாள். எனவே, குளித்தலை, முசிறி நகரங்களை இணைக்கும் தந்தை பெரியார் பாலம் தமிழகத்திலேயே ஒரு நதியின் குறுக்கே கட்டப்பட்ட மிக நீளமான பாலம் என்ற சிறப்பைப் பெற்றது. சுமார் 2200 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலம், கடல் மீது கட்டப்பட்டிருக்கும் பாம்பன் பாலத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தின் நீளமான பாலம் என்று கருதப்படுகிறது. சூரியன் மறையும் அந்தி நேரத்தில் அந்த காவிரிப்பாலத்தின் மீது சிறிது தூரம் காலாற நடந்து சென்று, காற்று வாங்கி வருவதே அலாதியான சுகம்தான்.

ஐந்து முறை தமிழக முதல்வரும், பத்து முறை சட்டமன்ற உறுப்பினருமான திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி முதல்முறையாக குளித்தலை தொகுதியில்தான் தனது அரசியல் பயணத்தைத் துவக்கினார். 1957ல் திமுக வெறும் 13 இடங்களையே கைப்பற்றியது. அதில் கருணாநிதியின் குளித்தலையும் ஒன்று. இதன்மூலம், திமுகவின் தவிர்க்க முடியாத சக்தியாக அப்போதே தன்னை நிரூபித்தார்.

ஏற்கனவே தொழில்கள் பிரிவில் குறிப்பிட்டதுபோல, குளித்தலை பகுதி வாழை தென்னிந்தியாவின் பல பகுதிகளுக்கும் ஏற்றுமதியாகும் அளவிற்குப் பிரபலம். அருகில் உள்ள மணப்பாறை முறுக்கு தமிழ்நாடு முழுக்க பிரபலம்.

ஆன்மிகத்தைப் பொறுத்தவரை, கடம்பர் கோவில் பாடல் பெற்ற ஸ்த்லமாகும். , தேவாரத்தில் திருநாவுக்கரசர் இக்கோயில் பற்றி சில பாடல்கள் பாடியுள்ளார். அவற்றில் ஒன்று:

நூலால் நன்றா நினைமின்கள் நோய்கெடப்
பாலான் ஐந்துடன் ஆடும் பரமனார்
காலால் ஊன்றுகந் தான்கடம் பந்துறை
மேலா னாஞ்செய்த வல்லினை வீடுமே.

“காலைக்கடம்பர், மதியம் சொக்கர் (அய்யர்மலை), அந்தி திருஈங்கோய்நாதர் (திருஈங்கோய்மலை)” என்று ஒரு சொற்றொடர் உண்டு. ஒரே நாளில் இந்த மூன்று சிவாலயங்களுக்கும் சென்று வருதல் சிறப்பு. திருஈங்கோய்மலை குளித்தலைக்கு வடக்கே 5 கி.மீ தொலைவிலும், அய்யர்மலை (ரத்தினகிரி) தெற்கே 10 கி.மீ தொலைவிலும் உள்ளது.

சுற்று வட்டாரப்பகுதியில் குளித்தலை தைப்பூசத் திருவிழா மிகவும் விஷேசம். குளித்தலையைச் சுற்றியுள்ள ஏழு ஊர்களின் சிவாலயங்களில் இருந்தும் அம்பாள் சமேத பெருமான் திருத்தேரில் அலங்கரிக்கப்பட்டு உற்சவமாக தைப்பூசத்தன்று கடம்பவனேஸ்வரர் கோயிலின் எதிரே உள்ள காவிரித்துறையில் கூடுவர். அம்பாள் உடனுறை கடம்பவன நாதரும் உற்சாகமாக அவர்களோடு உற்சவராக பங்கேற்பார். மறுநாள் திருஈங்கோய்நாதர் அம்பாளுக்கும், கடம்பவனேஸ்வரருக்கும் பெண் கேட்கும் படலம் நடக்கும். அப்போது அர்ச்சகர் ஒருவர் தும்மி விட, சகுனம் சரியில்லை. அடுத்த வருடம் பார்த்துக்கொள்ளலாம் என்று கலைந்து விடுவர். இந்த இரண்டு நாட்களும் எட்டு ஊர் மக்களும் காவிரித்துறையில் கூட திருவிழா களைகட்டி இருக்கும்.

குளித்தலை அன்பர்களுக்கு,
மேற்கூறப்பட்ட தகவல்கள் யாவும் தமிழ் விக்கிப்பீடியாவில் அடியேனால் இணைக்கப்பட்டவை. இதில் ஏதேனும் கருத்துப்பிழைகள் அல்லது புதிய கருத்துகள் இருப்பின் தயவுகூர்ந்து தெரியப்படுத்தவும் அல்லது தாங்களே விக்கியில் திருத்திவிடவும். நன்றி.

http://ta.wikipedia.org/wiki/குளித்தலை

வெளியூர் அன்பர்களுக்கு,
இதேபோல் நீங்களும் உங்கள் ஊர் பற்றிய தகவல்களை விக்கியில் தொகுக்கலாமே!

வாழ்க வளமுடன்!

பிள்ளையார் சுழி

உ.

மேற்கண்டது (உ) பிள்ளையார் சுழி என்று வைத்துக் கொள்ளவும். கணினியில் என்னால் பிள்ளையார் சுழியை இப்படித்தான் போட முடியும். இது என்னுடைய முதல் படைப்பு. எனவேதான் பிள்ளையார் சுழிக்கு விசை பலகையில் ஏதேனும் வழி இருக்கிறதா என்று தேடிப் பார்த்தேன். சரி.. இந்த keyboard -ஐ கண்டுபிடித்தவனுக்கு பிள்ளையார் சுழிதான் தெரியாது. atleast + (சிலுவையாவது) கொடுத்திருக்கலாம்.

போகட்டும் விடுங்கள்.  ஏதோ நானும் சுழியைப் போட்டு ஆரம்பித்து விட்டேன். ஆனால் எழுதுவதற்குத்தான் ஒரு வழியும் இல்லை. சரி.. இதையே கேட்போம். இந்த பிள்ளையார் சுழி போடும் பழக்கம் எப்படி வந்தது? (கி.மு பதினெட்டாம் நூற்றாண்டில்…… போன்ற கதையெல்லாம் வேண்டாம்).  முழுமுதற் கடவுள் பிள்ளையார் தெரியும். ஆனால் இந்த சுழியை எங்கிருந்து பிடித்தார்கள். எனக்கு தெரிந்த சுழி எல்லாம் என் தலையில் இருக்கும் சில வணங்காமுடிகள்தாம்!

 

என்றும் அன்புடன்,
சரவணன்.