Archive for ஜூலை 28th, 2010

வாழை – ஜூலை 2010 – முதல் ஒர்க் ஷாப் அனுபவங்கள் – பகுதி 1

உலகக்கோப்பை கால்பந்தில் என்னுடைய கணிப்புகள் எல்லாம் உதைக்கு மேல் உதை வாங்கியதால் ஒடி ஒளிந்து கொண்ட நான் இப்போதான் திரும்பி எட்டிப்பார்கிறேன். இது வாழை என்னும் NGO பற்றிய பதிவு.
வாழை அமைப்பு பற்றி அறிந்திராதவர்கள் இதுபற்றிய எனது முந்தைய பதிவை இங்கே
பார்க்கவும்

கடந்த வாரம் ஜுலை 24, 25 தேதிகளில் விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரத்தில் இந்தக் கல்வியாண்டுக்கான முதல் பயிற்சிப்பட்டறை (Workshop) நடைபெற்றது. ஜுலை 23 வெள்ளி இரவு 9 மணிக்கெல்லாம் சென்னையிலிருந்து “எங்களுக்கே எங்களுக்கு” என்று தனியாக ஒரு அரசுப்பேருந்தை எடுத்துக்கொண்டு கிளம்பினோம். ஆரம்பத்தில் கொஞ்ச நேரம் நாளை ஒர்க் ஷாப்பில் நம்ம டீமில் என்ன செய்யப்போகிறோம் என்று குருப் குரூப்பாக சீரியஸாக டிஸ்கஸ் பண்ணிக்கொண்டிருந்தார்கள். செங்கல்பட்டு நெருங்குகிற சமயம் திடீரென்று பின்னால் இருந்து ஒரு சத்தம்.. இரைச்சல்..கூச்சல்…அல்லது பாட்டு…எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். அது கேட்பவர்கள் விருப்பத்தைப் பொருத்தது. முன்னால் உட்கார்ந்து attendance papar-ஐ பார்த்துக் கொண்டிருந்த என் உச்சி மண்டையில் சுர் என்றது. அப்படியே அதையெல்லாம் போட்டுவிட்டு, பின்வாசல் அருகே சென்று நானும் ஜோதியில் ஐக்கியமானேன். கெளரிசங்கர் விரும்பும் எம்ஜிஆர் பாடல் முதல் விக்னேஷ் விரும்பும் விஜய் பாடல் வரை அனைத்தும் “பாடப்பட்டன”. சில பாடல்களின் இடையே உள்ள BGM கூட மறக்காமல் வாயிலேயே வாசிக்கப்பட்டது. என்னே இசை ஞானம் நம் வாழை மக்களுக்கு! இந்தக் காட்டுக்கத்தலையும் பொருட்படுத்தாது தூங்கிக்கொண்டிருந்த கும்பகர்ணர்களை என்னவென்று சொல்வது!

ஒருவழியாக அர்த்தராத்திரி ஒரு மணிக்கு பேருந்து அனந்தபுரம் வந்து சேர்ந்தது. மெயின்ரோட்டிலேயே டிரைவர் பஸ்ஸை நிறுத்திவிட்டு இதுக்கு மேல் போகாது என்று சொல்லிவிட்டார். அங்கிருந்து அரைகிலோ மீட்டர் தூரம் போகணும். நடப்பதில் பிரச்சினையில்லை. லக்கேஜ் ஒரு ‘மினி’ மூட்டை இருந்தது. எப்படியும் 20 கிலோ இருக்கும். அந்த நேரத்தில் வண்டி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. சளைக்கவில்லையே நம் நண்பர்கள்..! முருகன், விஸ்வா, விக்னேஷ், ஸ்ரீவத்ஸவ் மாற்றி மாற்றி கொண்டுவந்து விட்டனர். இடையில் நானும் முயற்சித்துப் பார்த்தேன். யப்பா.. என்ன கணம்! நன்றி முருகன் & கோ.

மண்டபத்திற்குள் வந்ததும் குடி தண்ணீர், Mosquito Liquid எல்லாம் ரெடியாக இருந்தது. ஏற்கனவே முகுந்தன் சொல்லி வாங்கி வைக்கச் சொல்லிவிட்டார். என்ன ஒரு திட்டமிடல்! பெண்களுக்கான தங்குமிடத்திற்கும் இவைகளெல்லாம் சப்ளை செய்யப்பட்டது. பின்னர் நான் நண்பர் ரவிக்குமாரை அழைத்துக்கொண்டு தூங்கலாம் என்று நகர… என்னை விச்சு மற்றும் முகுந்தன் அழைத்து, “நாளை (இல்லையில்லை இன்று) காலை முதல் இரவு வரை என்ன Schedule போட்டிருக்கிறாய் சொல்” என்று பிடித்துக்கொண்டனர். இது என்னடா மதுரைக்கு வந்த சோதனை.. “அர்த்த ராத்திரியில் அப்டேட்டா” என்று என்னையே நான் நொந்துகொண்டு ஒவ்வொன்றாக சொல்ல ஆரம்பித்தேன். அந்த நேரத்தில் மாடியில் பெண்கள் தங்கியிருக்கும் பகுதியில் இருந்து சில கூக்குரல்கள் ஸாரி..குயில்குரல்கள். “செந்தமிழ் நாடிது..எங்கள் செந்தமிழ் நாடிது” என்று கோரமாக… மறுபடியும் ஸாரி.. கோரஸாக பாடிக்கொண்டிருந்தார்கள்.

நள்ளிரவு இரண்டு மணிக்கு நம் தாய்த்தமிழ்ப் பெண்டிருக்கு இருக்கும் தமிழ்ப்பற்று கண்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். இது ஒருவேளை பஸ்ஸிலே நாங்கள் பாடி(?)யதற்கு பழிக்குப்பழியாகக் கூட இருக்கலாம். எது எப்படியோ..! இந்த நேரத்தில் இப்படி இ(ம்)சைப்பது(?!) மற்றவர்களுக்கு தொந்தரவாக அமையும் என்பதால், முகுந்தன் போனை எடுத்து அன்பரசி மேடமுக்கு கால் செய்தார். நீண்ட நேரம் ரிங் போனதற்கு பின்னர் அவர் போனை எடுக்க..முகுந்தன் அவரிடம், “மேடம்.. காலையில சீக்கிரம் எழுந்திருக்கணும் இல்லையா…அதுனால போதும். பாட்டெல்லாம் வேண்டாம். தூங்குங்களேன்” என்றார். அதற்கு அன்பரசி மேடம், “ஹலோ.. நான் ஏற்கனவே தூங்கியாச்சு..அங்க வேற ஒரு குரூப்தான் பாடிக்கிட்டு இருக்காங்க.. தூங்குறவங்களை எழுப்பி தூங்குன்னு சொல்றீங்களே..” என்று சொன்னாரே பார்க்கலாம். முதல் பல்பு வாங்கிவிட்டோம்.

அப்புறம் சரி நாம நம்ம வேலையப் பார்க்கலாம்னு Schedule பத்தி டிஸ்கஸ் செய்து வேண்டிய இடத்தில் சில திருத்தங்களும் செய்தோம். ஆங்.. சொல்ல மறந்துட்டனே… மண்டபத்துக்குள்ள நுழைந்ததுமே முகுந்தன் ஒரு check list கொடுத்து அது எல்லாம் பார்த்துக்கொள்ளச் சொன்னார். தினேஷ், முஜீப் மற்றும் அடியேன் ஆகியோர்தான் அதற்கு பொறுப்பு. EB Reading எடுத்துக்கொண்டோம். நாளைய ஒர்க் ஷாப்புக்குத் தேவையான materials இருக்கிறதா என்று உறுதி செய்து கொண்டோம். பாத்ரூமில் தண்ணீர் வருகிறதா என்று பார்த்து அதையும் உறுதி செய்து கொண்டோம். இங்குதான் பிரச்சினையே.. நாளை விடியும்போதே எங்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கும் என்று அப்போது நாங்கள் நினைக்கவில்லை. அது…. அடுத்த பதிவில்.

வாழை – ஜூலை 2010 – முதல் ஒர்க் ஷாப் அனுபவங்கள் – பகுதி 2